Search

ஆண்டிச்சி பாறையும் பாண்டிய மன்னனின் மூதேவி கோவிலும்


ஆண்டிச்சி பாறை

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் இரயில் நிலையத்தில் இருந்து 2கிமீ தொலைவில் உள்ளது ஆண்டிச்சி பாறை. இந்த ஆண்டிச்சி பாறையில் முடிக்கப் படாத பாண்டியர் கால குடைவரை கோவில் ஒன்று உள்ளது. இக்குடைவரையில் கருவறை மட்டும் உள்ளது. கருவறையில் ஆவுடையார் சிலையை வடிக்க முயன்று பாதியிலேயே கை விடப்பட்டுள்ளது. குடைவரையின் வலது பக்கம் உள்ள கோட்டத்தில் கிரீடம் இல்லாத விநாயகர் சிற்பமும், தமிழர்களின் தாய் தெய்வமான தவ்வையின் (மூதேவியின்) சிற்பமும் உள்ளது.

தவ்வை(மூதேவி) என்பவள் யார்?

ஒருவரை மூதேவி என்று திட்டுவதற்கு முன் மூதேவி என்பவள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மூதேவி என்றால் மூத்ததேவி. மூத்த தேவி என்ற சொல்லே மருவி மூதேவி ஆனது. புராணங்களின் படி மகாலட்சுமிக்கு முன் தோன்றியவள் மூத்த தேவி. வளத்தின் அடையாளம் தவ்வை, உரத்திற்கு அடையாளம் தவ்வை, விவசாயத்திற்கு தேவையான உரத்திற்கு கடவுள் தவ்வை. தவ்வையின் கொடி காக்கை கொடி, வாகனம் கழுதை. பெரும்பாலும் தவ்வையின் சிற்பங்கள் தனது மகன் மற்றும் மகளுடன் வயல் வெளியிலே கண்டெடுக்கப் பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் இவரை மாமுகடி, தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள், சேட்டை உட்படப் பதினான்கு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். தமிழகத்தின் பெரும் பகுதியைப் பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டில் தமிழர்களின் தாய் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்கள் காலத்தில் சேட்டை வழிபாடு இருந்ததை கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.


தமிழர்களின் தாய் தெய்வ வழிபாட்டில் கொற்றவைக்கு அடுத்தபடியாக அதிகளவில் தமிழர்களால் வழிபட பட்டவள் தவ்வை. இன்று திட்டுவதற்கும், வசைச் சொல்லுக்கும் ஆளாகி போனது காலத்தின் கொடுமை.


இந்த ஆண்டிச்சி பாறையிலுள்ள தவ்வையை பற்றியும், குடைவரை பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை பார்க்கவும்




45 views0 comments